அத் 3:- எதையாச்சும் சாதிச்சுடு கல்யானம் பன்லாம்னு பாத்தா, கல்யானம் பன்றதே ஒரு சாதனையா இருக்கும் போல!

நான் தேடி சென்ற அனைத்தும் எனக்கு சாதகமாக அமையவில்லை. அதனால், இனிமேல் நானே யாரையும் தேடி செல்லக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தேன். அதே நேரத்தில், என்னை தேடி இரண்டு மூன்று வரன்கள் வந்தனர்.


கார்த்திக் கொடுத்த ஆலோசனைப்படி, தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். காரணம், ஒரு ஆண் என்னை தாக்க முயற்சிக்கும்போது, நான் மனதாலும் உடம்பாலும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான். மேலும், என் வாழ்க்கையில் இதற்கு முன் நடந்தது மீண்டும் நடக்கக்கூடாது என்பதில் கார்த்திக் மிகுந்த அக்கறையுடன் இருந்தார்.


தற்காப்புக் கலை என் மனதை சாந்தப்படுத்தும், கடந்ததை மறக்க உதவும், எனக்கு ஒரு புதிய தைரியம் தரும் என்று அவர் கூறினார். நானும் ஒரு மாஸ்டரை தேடி, தற்காப்பு வகுப்பில் சேர்ந்தேன்.


அங்கே, மாஸ்டர் மூலமாக எனக்கு விலோஷனன் என்ற ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நல்ல உத்தியோகத்தில் உள்ளவர். அவர் வீட்டில் ஒரே ஆண்மகன்; சகோதரர்கள் இல்லை. வகுப்பு முடிந்ததும், என்னிடம் பேசிவிட்டு தான் அவர் செல்லுவார். அவரின் பேச்சும் நடத்தையும் மரியாதையுடனும் அன்புடனும் இருந்தது.


நான் வகுப்பில் சேரும் முன், மாஸ்டரிடம் என் நிலைமையையும், எனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் கூறியபோது, அவர் "இதற்குமேல் கவலைப்படாதே, எனக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இனிமேல் உன்னையும் சேர்த்து நான்கு மகள்கள்" என்று கூறி, ஆருதலாக சில வார்த்தைகள் சொன்னார்.


அப்போது என் கால்களில் பலத்த அடிகள் இருந்ததால், சரியாக நடக்க முடியவில்லை. மாஸ்டர், "என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அதை மட்டும் செய்" என்று கூறினார். நானும் அதன்படி செயல்பட்டேன்.


ஒருநாள் மாஸ்டர் என்னை உணவுக்கடைக்கு அழைத்தார். விலோஷனனும், மாஸ்டரின் மூன்று மகள்களும் வருவதாக கூறினார். நான் "சரி" என்று கூறி சென்றேன். உணவுக்கடையில் நிறைய தமிழர்கள் இருந்தனர். உணவு முடிந்ததும், விலோஷனன் என் வாகனத்தில் வருவதாக கூறினார்.


நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று குழப்பத்தில் இருந்தபோது, மாஸ்டர், "விலோஷனனை வீட்டில் விட்டுவிட்டு திரும்பிவா" என்று உதவி கேட்டார். மறுக்க முடியாமல், "சரி" என்று கூறி வாகனத்தில் ஏறினேன்.


விலோஷனன் என் வாகனத்தில் ஏறினார். வழியில், அவர் என் பெயர், எங்கிருந்து வருகிறேன், என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். நான் சுருக்கமாக கூறி, அவரைப் பற்றியும் கேட்டேன். அவரும் சுருக்கமாக பதிலளித்தார்.


பிறகு, என் தனிப்பட்ட வாழ்க்கை, கால்களில் அடிகள் பற்றிய கேள்விகள் கேட்டார். நான் கூற மறுத்தேன். வெகுநேரம் வானொலி கேட்டுக்கொண்டு சென்றோம். அவரது வீடு வந்ததும், நன்றி கூறி, என் கைபேசி எண்ணை கேட்டார்.


நான் தர மறுத்தேன். காரணம், இப்போதைக்கு எந்தவிதமான உறவுமுறையில் ஈடுபட தயாராக இல்லாத நிலைமையில்தான் இருக்கிறேன். விலோஷனன் "சரி, பரவாயில்லை" என்று கூறி சென்றுவிட்டார். நான் என் வாடகை வீட்டிற்கு திரும்பினேன்.


அன்றைய காலை முதல் விக்ரமிடமிருந்து WhatsApp-ல் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து, என் வேலைகளை செய்துகொண்டிருந்தேன்.


அப்போது என் அண்டைவீட்டார் உணவுகளுடன் வந்திருந்தார். நல்ல மனிதர்கள். பல வருடங்கள் பழகியதுபோல் வெகுநேரம் பேசினோம். "அக்கா" என்று அழைக்க மனமில்லாமல் "ஆண்டி" என்று அழைத்தேன். 49 வயதிலும் இளமையாக இருந்தார்.


ஆண்டி அவருடைய வாழ்க்கைச் சோகக் கதைகளை பகிர்ந்தார். என் கடந்த வாழ்க்கையை ஒத்தவாறு இருந்தது. 25 வருடமாக அடிகள், உதைகள் வாங்கிக்கொண்டு, இரண்டு மகன்களை வளர்த்திருக்கிறார்.


எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மூன்று ஆண்டுகள் கூட நான் தாங்க முடியவில்லை.


அப்போது ஆண்டி கூறினார்:

"நீ வேலைக்குச் செல்லும் பெண். எவரின் துணை இல்லாமல் வாழும் சிங்க பெண். அதனால்தான் மூன்று வருடத்திலேயே திருமண பதிவு முரிவு செய்து தனித்து வாழ முடிகிறது."


ஆண்டிக்கு தைரியம் 25 ஆண்டுகள் கழித்தே வந்தது. எனக்கே பெருமையாக இருந்தது. என்னை வளர்த்த விதம் அப்படி. என் அம்மாவின் தைரியமே எனக்கு இப்போது இருக்கிறது என்று நினைத்தேன்.


அப்போது கூறினேன்:

"எதையாவது சாதித்துவிட்டு கல்யாணம் பண்ணலாம். கல்யாணம் செய்வதே ஒரு சாதனையாக இருக்கும் போல."


நான் பதிவு திருமணம் மட்டுமே செய்திருந்தேன். திருமணத்திற்கு முன்பே சண்டை வந்து பிரிந்துவிட்டோம்.


அதற்கு ஆண்டி "நல்லதுதான்" என்று கூறி, என்னை தேற்றினார். வெகுநேரம் பேசியபின் அவர் வீட்டிற்கு சென்றார்.


இரவு உணவுக்காக வெளியே செல்ல வேண்டாம், ஆண்டி கொடுத்த உணவே போதும் என்று எண்ணி, சுடுநீர் வைத்து குளித்துவிட்டு, பூஜை மேடையில் நின்று "எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு திருநீர் இட்டுக்கொண்டு உணவு உண்டேன்.


பின் கைபேசியை எடுத்துப் பார்த்தபோது, விக்ரமிடமிருந்து சில கேள்விகள் வந்திருந்தன. அவற்றை படித்து, என்ன பதில் கூற வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.


*அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நிச்சயமாக நான் கூறும் விஷயத்திற்கு நீங்களே என்னை கோபித்துக்கொள்வீர்கள்!*

Comments